No icon

குடந்தை ஞானி

புதிய அமைப்பின்கீழ்  வத்திக்கானின் 4 தங்கும் இல்லங்கள்

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் உள்ளிட்ட, வத்திக்கானைச் சார்ந்த நான்கு தங்கும் இல்லங்களை ஒன்றிணைக்கும் ஒரு புதிய அமைப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 05 ஆம் தேதி, வியாழனன்று உருவாக்கியுள்ளார். இந்த இல்லங்களின் சொத்துகளை, APSA என்ற திரு அவையின் சொத்துகளைப் பராமரிக்கும் திருப்பீட அமைப்பின்கீழ் வருகின்ற ஆணை அறிக்கையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

1996 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி திருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல் அவர்கள் டோமுஸ் சாந்தா மார்த்தா இல்லத்தை உருவாக்கினார். இந்த இல்லம், ஏற்கனவே செயல்படும் போன்டிபிக்கும் ஆஸ்பித்தியும் சாந்தா மார்த்தா இல்லத்தின் தொடர்ச்சியாக உள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இதே திருத்தந்தை, 1999 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி, "டிராஸ்போன்டினா" சாலையிலுள்ள டோமுஸ் ரோமானா சேக்ரட்டாலிஸ் அருள்பணியாளர் இல்லத்தையும், பன்னாட்டு அருள்பணியாளர்கள் தங்குவதற்கென்று டோமுஸ் இன்டர்னேஸ்னாலிஸ் பாலுஸ்VI இல்லத்தையும் உருவாக்கினார் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மூன்று இல்லங்களும், திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்கள், ஆயர்கள் உரோம் நகருக்கு வருகின்ற திருப்பீடத் தூதரகப் பணியாளர்கள், திருத்தந்தையை அல்லது திருப்பீட அதிகாரிகளைச் சந்திக்க வருகின்ற அருள்பணியாளர்கள் போன்ற அனைவரையும் அருள்பணியாளர்கள் மீதுள்ள உடன்பிறப்பு உணர்வில் வரவேற்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பீடத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கென்று முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி காஸா சேன் பெனடித்தோ இல்லத்தை உருவாக்கினார் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது, திருப்பீடத்தோடு தொடர்புடைய டோமுஸ் வேட்டிக்கானே என்ற புதியதோர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது வத்திக்கான் நாட்டிற்குள் அமைந்திருக்கும் என்று அறிவித்துள்ளார்.

Comment